வங்காள விரிகுடா ; விமர்சனம்

 

சினிமாவில் இருக்கும் 21 கிராப்ட் அனைத்தையும் தனி ஒரு ஆளாக இருந்து கதாநாயகனாக நடித்து தன்னை மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக காட்டிக்கொண்ட குகன் க்கரவர்த்தியார் கை வண்ணத்தில் வெளிவந்திருக்கும் படம் வங்காள விரிகுடா. படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.

தூத்துக்குடி மாவட்டம் அடிதடிக்கு பெயர் போனது. அங்கு மிகப்பெரிய மனிதராக, தாதாவாக, அரசியல் பிரமுகராக வலம் வரும் குகன் சக்கரவர்த்தியாரை தன் நண்பரின் மகள் வற்புறுத்தி திருமணம் செய்ய, ஆனால் நான்கு வருடம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கண்டிஷன் போடுகிறார்.

அதே சமயம் தான் காதலித்த காதலி வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து வாழ்க்கை சிறப்பாக இல்லாத காரணத்தினால் அவள் கணவனை கொலை செய்து காதலியை கள்ளக்காதலியாக வைத்துக் கொள்கிறார். இது ஒரு புறம் இருக்க கொல்லப்பட்ட கணவன் செல்போனில் அடிக்கடி மிரட்ட அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகப் பெரிய உண்மை தெரிய வருகிறது. அது என்ன ? பாருங்கள்.. வங்காள விரிகுடா.

டாக்டர் அப்துல் கலாமின் பொன் மொழியான கனவு காணுங்கள் என்ற வார்த்தை வைத்துக்கொண்டு இயக்குனர் குகன் சக்கரவர்த்தியார் ஒரு மிகப்பெரிய விஷயத்தை சொல்ல வருவது போல் திரைக்கதை அமைத்து காட்சிக்கு காட்சி ஒரு மாஸ் ஹீரோவை போல் பில்டப் செய்கிறார். ஒரு காட்சியில் பொன்னம்பலம், குகன் சக்கரவத்தியாருக்கு சப்போர்ட்டா பேச அடுத்த காட்சியில் மிகப்பெரிய வில்லன் போல் போன் செய்து சண்டைக்கு அழைக்க குழப்பத்தில் நான் ரஜினி அல்ல, நான் கமல் அல்ல, நான் சிவாஜி அல்ல என்ற பாடல் வரிகளை அமைத்து பாடிய குகன் சக்கரவர்த்தியார் எது இல்லை என்று கூறுகிறாரோ அது இருக்கு என்பது போல் இருக்கிறது.

ஒன்றுக்கு இரண்டு நாயகிகள்.. கிளாமருக்காக அதுவும் நாயகனுக்காக ஏங்கும் நாயகிகள்.. இன்னொரு பெண்மணி இவரை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, சரி என்று சம்மதித்து அவரின் வேலை ஆளை கல்யாணம் செய்ய சம்மதித்து ஒரே ஒருமுறை உங்களை கட்டிப்பிடித்துக் கொள்கிறேன் என்று சொல்லும் அந்த பெண்ணை என்ன செய்வது தான் ஒரு மிகப்பெரிய கதாநாயகன் என்று காட்டிக் கொள்வதற்காக அனைவரும் தன்னை விரும்புவது போலவும் தன்னை ஆதரிப்பது போலவும் காட்சிகளை அமைத்து தன்னை ஒரு மாஸ் கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள குகன் சக்கரவர்த்தியார் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்

அது மட்டும் அல்லாமல் அவ்வப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார். எங்கிருந்து வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். இறுதிக்காட்சியில் இவர் எம்பி ஆவதற்கு செய்யும் தகிடு தத்தங்கள், கொலைகள் என அரசிலையும் அலசி எடுத்திருக்கிறார். சென்னை மெரினா பீச்சை திராவிட கடற்கரை என பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்லும் இவரின் எண்ணம் யாருக்கு ஜால்ரா என்பது படம் பார்க்கும் ரசிகனுக்கு தெரியும்.

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வார்கள் என்பது நம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவர் கடன் வாங்கி வைத்திருக்கிறார் என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிகிறது.

vangala viriguda movie reviewவங்காள விரிகுடா ; விமர்சனம்