இருமுடி கட்டு – திரை விமர்சனம்

 

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா, சாய்குமார், அஜய் கோஷ், ஸ்வஸிகா விஜய் நடிப்பில்
சிவா நிர்வாணா இயக்கத்தில்
நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் தயாரிப்பில்
வெளி வந்திருக்கும் படம் இருமுடிகட்டு

படம் என்ன சொல்ல வருகிறது

திரிநாத் (ரவி தேஜா) மனைவி (பிரியா பவானி சங்கர்) மற்றும் செல்ல மகளுடன் (பேபி நக்ஷத்ரா) வாழ்கிறார். மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார், ஆனால் குடி பழக்கத்தால் வீட்டில் நிம்மதி இல்லை. ஒரு நாள் மகளின் கண்ணீரும், வேண்டுகோளும் அவரை மாற்றுகிறது. குடியை விட்டு விட்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.

மாலை போட்ட பிறகுதான் அவர் வாழ்க்கையில் பெரிய சோதனை ஆரம்பிக்கிறது. ஊரில் நடக்கும் சில மர்ம சம்பவங்கள், அவரது குடும்பத்தை, குறிப்பாக மகளை சுற்றி வருகிறது. பக்தி மார்க்கத்தில் இருக்கும் ஒரு தந்தை, தன் குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறார் என்பதுதான் மீதி கதை.

 

ரவி தேஜா – முற்றிலும் வித்தியாசம்: வழக்கமான மாஸ், காமெடி ரவி தேஜாவை இதில் பார்க்க முடியாது. பாசமுள்ள அப்பாவாக, குற்ற உணர்வுடன் இருக்கும் கணவனாக அற்புதமாக நடித்திருக்கிறார். மகளுடன் வரும் எமோஷனல் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது. இது அவருக்கு ஒரு முக்கியமான படம்.

பேபி நக்ஷத்ரா – இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் இவர்தான். ரவி தேஜாவின் மகளாக வந்து அசத்தியிருக்கிறார். அப்பா – மகள் பாச பிணைப்புதான் படத்தின் மையம், அதை இருவரும் அழகாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

பிரியா பவானி சங்கர்:வெறும் நாயகியாக இல்லாமல், குடும்பத்தை தாங்கும் தாயாக, மனைவியாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

சாய்குமார், அஜய் கோஷ், ஸ்வஸிகா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்துக்கு பெரிய பலம். குறிப்பாக ‘இருமுடி கட்டு’ பாடல் பக்தியையும், பயணத்தின் உணர்வையும் அப்படியே கண் முன் கொண்டு வருகிறது. பின்னணி இசை எமோஷனல் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

இயக்குனர் சிவா நிர்வாணா ஒரு சாதாரண குடும்ப கதைக்குள் பக்தி, பாசம், குற்றம், மனமாற்றம் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார். ‘பெண் பிள்ளைகளை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும்’ என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

ஆக்‌ஷன் மற்றும் பதட்டமான காட்சிகளில் எடிட்டிங் வேகமாக இருந்து விறுவிறுப்பை கூட்டுகிறது

 

‘இருமுடி கட்டு’ என்பது ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் படம் அல்ல. ஒரு தந்தையின் தன் மகள் மீதான அளவற்ற பாசம், அந்த பாசத்தால் வரும் மனமாற்றம், ஐயப்ப பக்தி என உணர்வுப்பூர்வமாக பயணிக்கும் ஒரு நல்ல குடும்பப் படம். ரவி தேஜாவின் வித்தியாசமான நடிப்புக்காகவும், அப்பா-மகள் பாசத்திற்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

 

ரேட்டிங் – 4/5

Comments (0)
Add Comment