99/66’ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) – திரைப்பட விமர்சனம்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மையமாகக் கொண்டு திகில் மற்றும் மர்ம திருப்பங்களுடன் உருவாக்கப்பட்ட படம் தான் ‘99/66’. ரச்சிதா மகாலட்சுமி – சபரி தம்பதிகள் 66ஆம் எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பின் 99ஆம் எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு உருவாகிறது. இதற்கிடையே இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிக்கும் சங்கத் தலைவர் மூர்த்தி மற்றும் அவரை தடுத்து நிறுத்தும் மர்ம சம்பவங்கள் போன்றவை கதையில் சஸ்பென்ஸை ஏற்படுத்துகின்றன.

பணத்திற்காக தனது மனைவி ரச்சிதாவை கொலை செய்ய சபரி திட்டமிடுவது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற சம்பவங்கள் கதையை திகில் நிறைந்த பாதைக்கு நகர்த்துகின்றன.

ஒருநாள் இரவில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை ரச்சிதா பார்க்கிறார். ஆனால் குடியிருப்புவாசிகளின் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்றபோது, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99ஆம் எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

- Advertisement -

அப்படியானால் ரச்சிதாவுக்கு மட்டும் தோன்றும் ஸ்வேதா யார்? அவர் ஏன் ரச்சிதாவை சந்திக்கிறார்? என்ற மர்மங்களே படத்தின் சுவாரஸ்யமான மையமாக அமைந்துள்ளன.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, பயம், குழப்பம், பின்னர் ஆவி புகுந்தபின் வெளிப்படும் ஆக்ரோஷம் போன்ற உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்கிறார்.

ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அமைதியான நடிப்பின் மூலம் மனதை கவர்கிறார். அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் அவரது பாத்திரம் கதைக்கு ஒரு உணர்ச்சி அடிப்படையையும் அளிக்கிறது.

நாயகர்களாக நடித்துள்ள சபரி மற்றும் ரோகிந்த் புதுமுகங்கள் என்றாலும், நல்லவர்களாக நடித்து பின்னர் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் அவர்களது நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி பகுதிகள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், சில இடங்களில் சிரிப்பை தருகின்றன. பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு தேவையான ஆதரவாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, முழு படத்தையும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் படமாக்கியிருந்தாலும், பல்வேறு கோணங்களில் காட்சிகளை அமைத்து சலிப்பில்லாமல் வைத்திருக்கிறார்.

மீனாட்சி சுந்தரத்தின் எடிட்டிங், ஜெயமுருகனின் கலை இயக்கம் ஆகியவை படத்தின் திகில் சூழலை உருவாக்க உதவுகின்றன.

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், தயாரிப்பு என பல பொறுப்புகளை ஏற்றுள்ள எம்.எஸ். மூர்த்தி, வழக்கமான திகில் பட பாணியில் கதையை சொல்லியிருந்தாலும் அதில் திருப்பங்களையும் சிறிய சமூக கருத்துகளையும் இணைத்து சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அவசியம் என்பதையும், அனைத்து உயிர்களிடமும் மனிதர்கள் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் படம் உணர்த்துகிறது.

மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும் மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக ‘99/66’ படம் அமைந்துள்ளது.